நெடுஞ்சாலையோரம் வசிப்பவர்களின் வீடுகளை இடிக்க எதிர்ப்பு:தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நெடுஞ்சாலையோரம் வசிப்பவர்களின் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் தேனி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று மாலையில் வந்தனர். தாலுகா அலுவலகம் முன்பு, மதுரை சாலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் தாசில்தார் சரவணபாபுவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "32-வது வார்டுக்கு உட்பட்ட மதுரை சாலையில் சுமார் 80 ஆண்டு காலமாக ஏழை மக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த 2000-ம் ஆண்டு முதல் மாற்றுஇடம் கேட்டு கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திடீரென நாளை (வெள்ளிக்கிழமை) குடியிருப்பு வீடுகளை அகற்றுவதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர். மாற்று இடம் கொடுக்கும் வரை வீடுகளை அப்புறப்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியிருந்தனர்.