பள்ளிக்கூட மாணவிகளிடம் ஆபாச பேச்சு; ஆசிரியர் கைது
சிவகிரியில் பள்ளிக்கூட மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது.
சிவகிரி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சோழாபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). இவர் தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்துடனும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் நேற்று முன்தினம் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். உடனே பெற்றோர்கள் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து பள்ளியின் முன்பு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், உறவினர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆபாசமாக பேசிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் சிவகிரி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சஜிவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து ஆசிரியர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் அவர் மீது சிவகிரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் சிவகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.