சேலத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


சேலத்தில்  கல்லறை திருநாள் அனுசரிப்பு  தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

சேலத்தில் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்களால் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சேலம்

சேலம்,

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் அனைத்து ஆத்மாக்களின் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது குடும்பத்தினர், உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று, அவற்றை சுத்தப்படுத்துவர். பின்னர் கல்லறைகளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்வது வழக்கம். மேலும் கல்லறை திருநாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

அதன்படி கல்லறை திருநாளையொட்டி நேற்று சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து பேராலயத்தின் எதிரே உள்ள கல்லறை தோட்டத்தில் பங்கு தந்தை ஜோசப் லாசர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இறந்த தங்களது குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை மலர்களால் அலங்கரித்தனர். மேலும் கல்லறைகள் மீது மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

கிறிஸ்துநாதர் ஆலயம்

சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயம் அருகே உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் உதவி ஆயர் கிருபா மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஆங்கிலேயர் கல்லறைகள் மீது மெழுகுவர்த்தி ஏற்றினர். மேலும் அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்தனர்.

இதேபோல் செவ்வாய்பேட்டை, அழகாபுரம், அஸ்தம்பட்டி, ஜான்சன்பேட்டை, சூரமங்கலம், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கிச்சிபாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களிலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும் தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story