ஆக்கிரமிப்பிலுள்ள வாரச்சந்தையைமீட்க போராட்டம் அறிவிப்பு:அதிகாரிகள் சமரசம் ெசய்தனர்
தட்டார்மடத்தில் ஆக்கிரமிப்பிலுள்ள வாரச்சந்தையை மீட்க போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. அதன்பின் செயல்படாமல் முடங்கி போனது. அந்த இடம் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதை மீட்க நடவடிக்கை எடுக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் வாரச்சந்தையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து வாரச்சந்தை இடத்தை மீட்க கோரி வருகிற பிப். 17-ந்தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் தங்கையா தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன், போராட்டக்குழுவினர் உள்ளிட்ட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள வரைபடம் மூலம் அளவீடு செய்து சந்தை ஆக்கிரமிப்புகள் ஒரு வாரத்தில் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.