பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை


பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை
x

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மாசி கொடை விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் பத்திரகாளி அம்மன் கோவில் இருந்து யானை மீது சந்தன குடம் பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு பைங்குளம் கண்டன் சாஸ்தா கோவில் இருந்து சந்தன குடம் மற்றும் காவடி பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சார்பில் சந்தனகுடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவிலை வந்தடைந்தது.

பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதல் போன்றவை நடந்தது.

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம், 7.30 மணிக்கு பக்தி பஜனை, 10 மணிக்கு சமய மாநாடு, 2 மணிக்கு பக்தி பஜனை, 3.30 மணிக்கு வில்லிசை, 6 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், இரவு 10 மணிக்கு ஆன்மிக அருளிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

ஒடுக்கு பூஜை

விழாவில் இன்று நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது. இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் 20-க்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்கள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படும். பின்னர் சன்னதி அருகாமையில் உள்ள சாஸ்தான் கோவில் அருகில் இருந்து ஒடுக்கு பவனி புறப்படும். பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருவார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படும்.

தொடர்ந்து கும்பளங்காய் மஞ்சள் நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறைமேளம் அடிக்கப்படுகிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது.

குவியும் பக்தர்கள்

ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும் போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும். பின்னர் கொடி இறக்குதலும் நடக்கிறது.

இவ்வாறு நடக்கும் பூஜையைக்காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனிவரும் வளாகத்திலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நிற்பார்கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.


Next Story