ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை; தாளவாடியில் ராகி பயிர்கள் மண்ணில் சாய்ந்தன
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தாளவாடி பகுதியில் பெய்த மழை காரணமாக ராகி பயிர்கள் மண்ணில் சாய்ந்தன.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தாளவாடி பகுதியில் பெய்த மழை காரணமாக ராகி பயிர்கள் மண்ணில் சாய்ந்தன.
தாளவாடி
மாண்டஸ் புயல் காரணமாக தாளவாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கெட்டவாடி, மெட்டல் வாடி, தலமலை, ஆசனூர், குளியாடா, கேர்மாளம், திகனாரை, அருள்வாடி, பனக்கள்ளி மற்றும் வனப்பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நல்ல மழை பெய்தது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மழை காரணமாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள ராகி பயிர்கள் மண்ணில் சாய்ந்தன. இதேபோல் 2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மக்காசோள பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
டி.என்.பாளையம்
இதேபோல் டி.என்.பாளையம், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், பங்களாப்புதூர், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, பெருமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணி அளவில் திடீரென பலத்த மழை தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதைத்தொடர்ந்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ணநிலையும் நிலவியது.
சோலார்
சோலார், வெண்டிபாளையம், 46 புதூர், லக்காபுரம், கஸ்பாபேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை 4.25 மணி முதல் 4.40 மணி வரை மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதுடன், குளிர் காற்றும் வீசியது. மாலை நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பொதுமக்கள் என பல தரப்பினரும் பெரும் அவதி அடைந்தனர்.
அந்தியூர்
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணியில் இருந்து 5 மணி வரை கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் அந்தியூர் பகுதியில் குளிர் காற்று வீச தொடங்கியது.