அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின்ரேஷன் கார்டுகளுக்கான சலுகைகள் நிறுத்தப்படும்:ஆலோசனை கூட்டத்தில் முடிவு


அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின்ரேஷன் கார்டுகளுக்கான சலுகைகள் நிறுத்தப்படும்:ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களின் ரேஷன் கார்டுகளுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் என்று இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தேனி

கலந்தாய்வு கூட்டம்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அதனை கடத்தி செல்வோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக, கேரள மாநில உணவு வழங்கல் அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இடையே கலந்தாய்வு கூட்டம் கம்பம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு (மதுரை) பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார்.

கேரள மாநிலம் கட்டப்பனை உதவி போலீஸ் சூப்பிரண்டு குரியகோஸ், இடுக்கி மாவட்ட தனிப்பிரிவு உதவி போலீஸ் சூப்பிரண்டு, தேனி மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) இந்துமதி, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இரு மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர், குழுவாக இணைந்து இரு மாநில சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.

சலுகைகள் நிறுத்தம்

தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களின் ரேஷன் கார்டுகளுக்கான சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும். மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தும் வாகனங்கள், அரிசி கடத்தல்காரர்களை பொதுமக்கள் அடையாளம் காட்டி போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் தமிழக-கேரள எல்லையான கம்பமெட்டு, குமுளி ஆகிய இடங்களில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்று கேரள அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ரேஷன் அரிசியை அரவை மில்களில் மாவாக அரைத்து கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக பொதுமக்கள் 1967 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா். இந்த கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர்கள் பாண்டியன் (உத்தமபாளையம்), ராமராஜ் (போடி), பீர்மேடு தாசில்தார் சன்னிசார்ஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story