மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலின் செயல் அலுவலர் நியமனத்துக்கு தடை-ஐகோர்ட்டு உத்தரவு


மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலின்  செயல் அலுவலர் நியமனத்துக்கு தடை-ஐகோர்ட்டு உத்தரவு
x

மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கஞ்சனூர் கோவில்

மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை ஆதீனத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், கஞ்சனூர், திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் கோவில்கள் உள்ளன. ஆதீனத்துக்கு சொந்தமாக மதுரை, தஞ்சை, நாகை, விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.

விதிகளின்படி ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களில் செயல் அலுவலரை நியமிக்க 3 நபர்களை தேர்வு செய்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பரிந்துரை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை செயல் அலுவலராக ஆதீனம் தேர்ந்தெடுப்பார். தஞ்சை மாவட்டம் தேரழந்தூர் ஆமருவிப்பெருமாள் கோவில் செயல் அலுவலர், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

இந்தநிலையில் அவருக்கு பதிலாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரை, இந்த கோவில் நிர்வாக செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பில் நியமித்து அறநிலையத்துறை துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

ரத்து செய்ய வேண்டும்

இது சம்பந்தமாக ஆதீன நிர்வாகத்திடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யவில்லை. இது கோவில் நிர்வாகத்திற்கு எதிரான செயல் ஆகும்.

எனவே கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் செயல் அலுவலரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறையின் இணை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களில் செயல் அலுவலர்களை நியமிக்கும் போது அதற்கான விதிகளை முறையாக பின்பற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பல ஆண்டுகளாக...

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், பல ஆண்டுகளாக இதே நடைமுறையைத்தான் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் தற்போது இந்த கோவிலின் செயல் அலுவலரை மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த மனுதாரர் வக்கீல், ஏற்கனவே இருந்த ஆதீனம் இது போன்ற நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் கோவில் விதிமுறைகளை அறநிலையத்துறை பின்பற்றவில்லை. தற்போது இந்த கோவிலின் செயல் அலுவலர் நியமனம் பற்றிகூட அறநிலையத்துறை சார்பில் மதுரை ஆதீனத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது ஆதீன விதிகளுக்கு புறம்பான செயல். மேலும் செயல் அலுவலரை நியமிப்பதற்கான அதிகாரம் அறநிலையத்துறை கமிஷனருக்கு மட்டுமே உள்ளது. ஆனால் இந்த கோவிலின் செயல் அலுவலரை இணை கமிஷனர் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஏற்புடையதல்ல, என்று வாதாடினார்.

இடைக்கால தடை

விசாரணை முடிவில், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விதிப்படி மூன்று நபர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து, ஆதீனத்திற்கு பரிந்துரை செய்யலாம் எனவும் குறிப்பிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story