நுகர்பொருள் வாணிபக்கழக துணைமேலாளர் அலுவலகம்- சேமிப்பு கிடங்கில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
நுகர்பொருள் வாணிபக்கழக துணைமேலாளர் அலுவலகம்- சேமிப்பு கிடங்கில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்பொருள் வாணிபக்கழக துணைமேலாளர் அலுவலகம்- சேமிப்பு கிடங்கில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்பொருள் வாணிபக்கழகம்
திருவாரூரில், தஞ்சை -நாகை சாலையில் வன்மீகபுரத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் துணை மேலாளர் அலுவலகம், கொள்முதல் பிரிவு, தரக்கட்டுப்பாட்டு பிரிவு, பொதுவினியோகம் திட்ட பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இந்த சேமிப்பு கிடங்கிற்கு கொள்முதல் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்மூட்டைகள், அரவை ஆலைகளில் இருந்து கொண்டுவரப்படும் நெல்மூட்டைகள், பொதுவினியோக திட்டத்திற்கான பொருட்கள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
11 பேர் ெகாண்ட குழு
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அதன்படி திருவாரூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள துணைமேலாளர் அலுவலகம் மற்றும் சேமிப்பு கிடங்கு உள்பட பல்வேறு பிரிவுகளில், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் 11 போ் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனை செய்தனர்.
இதனை தொடர்ந்து சேமிப்பு கிடங்கு முன்பக்க கேட் அடைக்கப்பட்டது. அலுவலகத்திற்குள் இருந்து யாரும் வெளியே செல்லவும், வௌியில் இருந்து யாரும் உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை. துணை மேலாளர் அலுவலகம் உள்பட அனைத்து பிரிவுகளிலும் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் சேமிப்பு கிடங்கு வளாகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
லாரி டிரைவர்களிடம் லஞ்சம்
இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 896 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், தனியார் அரவை ஆலைகளில் இருந்து அரிசி மூட்டைகளை கொண்டு வரும் லாரி டிரைவர்களிடம் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் அலுவலர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தொிவித்தனர். நேற்று திருவாரூரில் நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.