சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 14 வீடுகளில் வசித்தவர்களை வெளியேற்றிய அதிகாரிகள் தடுக்க முயன்ற 17 பேர் கைது


சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில்  14 வீடுகளில் வசித்தவர்களை வெளியேற்றிய அதிகாரிகள்   தடுக்க முயன்ற 17 பேர் கைது
x

ஓமலூர் அருகே சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 14 வீடுகளில் வசித்தவர்களை அங்கிருந்து அதிகாரிகள் அகற்றி நில உரிமையாளரிடம் வீடுகளை ஒப்படைத்தனர். அதே நேரத்தில் இந்த பணியை தடுக்க வந்த விவசாய சங்கத்தினர் 17 பேர் கைது

சேலம்

ஓமலூர்,

ஐகோர்்ட்டு உத்தரவு

ஓமலூர் அடுத்த எட்டிகுட்டப்பட்டி ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியில் ஓமலூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அறக்கட்டளைக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு, பள்ளி அறக்கட்டளை சார்பில் இந்த நிலம் விற்கப்பட்டது. இதனால் குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் அந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்து விட்டதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அந்த நிலத்தில் உள்ள வீடுகளில் குடியிருப்போரை வெளியேற்றி விட்டு வீட்டுக்கு சீல் வைத்து நில உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

விவசாய சங்கத்தினர் திரண்டனர்

இதையடுத்து வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை அப்புறப்படுத்தி நில உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்க உள்ளதாக தகவல் கிடைத்ததால் நேற்று முன்தினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆனால் வருவாய் துறையினர் வராததால் விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் தலைமையில் வருவாய் துறையினர் அங்கு வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி நில உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் உள்ள வீடுகளில் பொருட்களை அப்புறப்படுத்தி வீடுகளை சீல் வைத்து உரியவரிடம் ஒப்படைக்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல், அரியாகவுண்டர் ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்த முயன்றனர்.

17 பேர் கைது

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கவேல், அரியாகவுண்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு ஓமலூரில் உள்ள திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் வீட்டு உரிமையாளர் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து விட்டு 14 வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

அந்த பொருட்களை வருவாய் துறையினர் வெளியே எடுத்து வைத்த பொருட்களை வாகனம் வைத்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். பொருட்களை பெற்றுக் கொள்ளாதவர்களின் வீட்டு உபயோகப் பொருட்களை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க எடுத்து சென்றனர். இதையடுத்து அங்கு உள்ள வீடுகள் நில உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலையில் அந்த வீடுகளை புல்டோசர் எந்திரம் மூலம் அந்த நில உரிமையாளர் இடித்து அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் ஓமலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story