மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு
சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மீன்பிடி தடைக்காலம்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் விசைப்படகுகளை மீனவர் நலம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆய்வு
ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி முடிய மொத்தம் 61 நாட்களுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகுகளும் கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். பஸ்களுக்கு ஆண்டுதோறும் தகுதி சான்றிதழ் வழங்கு வது போல் மீன்வளத்துறை உதவி இயக்குநர், தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் படகுகள் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வுசெய்து சான்றிதழ் வழங்குவர்.
சான்றிதழ்
சேதுபாவாசத்திரத்தில் 52, மல்லிப்பட்டினத்தில் உள்ள 51, கள்ளிவயல்தோட்டத்தில் உள்ள 45 ஆகிய 148 விசைப்படகுகளையும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன், கூடுதல் இயக்குநர் கொளஞ்சிநாதன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா? என ஆய்வு செய்து அனைத்து படகுகளும் தகுதியானது என சான்றிதழ் வழங்கினர். நாகப்பட்டினத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் வரை ஒரே கட்டமாக ஆய்வு நடைபெற்றது.