அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
சுகாதாரப்பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறினார்.
சுகாதாரப்பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறினார்.
ஆய்வு கூட்டம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய பொது சீராய்வுக் குழுமம் குழு வருகை தருவதை யொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார். தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மத்திய அரசிலிருந்து பொது சீராய்வு குழுமம் சுகாதாரம் தொடர்பான அனைத்து துறைகளையும் ஆய்வு செய்ய வருகைத் தர உள்ளது.
ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
சுகாதாரத்துறை மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படும் செயல் திட்டங்களையும், அதற்காக பின்பற்றும் வழிமுறைகளை ஆய்வு பணியின் முக்கியத்துவத்தையும் விரிவாக விவரித்து, இந்த ஆய்வு பணியினை சிறப்பான முறையில் அனைத்து சுகாதாரத்துறை துணை இயக்குனர்களும், அலுவலர்களும் நடத்தி முடிக்க வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
மேலும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சுகாதாரப்பணிகளை சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில திட்ட மேலாளர் (தேசிய நலவாழ்வுக்குழுமம்) அழகுமீனா, தேசிய நலவாழ்வுக்குழுமம் துணை இயக்குனர் சாந்தி, கூடுதல் இயக்குனர் ஜெரால்டு மரிய செல்வம், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் திருமால்பாபு, இணை இயக்குனர் (நலப்பணிகள்) ஏழுமலை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் செல்வக்குமார், சதீஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.