அதிகாரிகள் முழுமுனைப்புடன் செயல்பட வேண்டும்


அதிகாரிகள் முழுமுனைப்புடன் செயல்பட வேண்டும்
x

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் முழுமுனைப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.

திருவாரூர்

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் முழுமுனைப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை ஆணையருமான நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அப்போது கணிப்பாய்வு அலுவலர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

வளர்ச்சி பணிகள்

வளர்ச்சி திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நலத்திட்ட உதவிகள் உரியவர்களுக்கு கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அனைத்து துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இல்லம் தேடி கல்வி

இதனை தொடர்ந்து திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி மேப்பாடி கிராமத்தில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கற்பிக்கப்படும் கல்வி முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கல்வி கற்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உடனிருந்தார்.


Next Story