தாழ்வான பகுதிகளை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்
வடகிழக்கு பருவமழையையொட்டி தாழ்வான பகுதிகளை மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
ஊட்டி,
வடகிழக்கு பருவமழையையொட்டி தாழ்வான பகுதிகளை மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளருமான டி.என்.வெங்கடேஷ் தலைமை தாங்கி, பல்வேறு அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:-
நீலகிரியில் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். அதேபோல் நகர்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்துவதோடு, நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பெரிய பணிகளை எடுத்து மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
வடகிழக்கு பருவமழையையொட்டி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, உறுதி செய்ய வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட நிலை அலுவலர்கள் கள ஆய்வுகளை சரியான முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மனோகரி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.