முழு ஈடுபாட்டுடன் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்


முழு ஈடுபாட்டுடன் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:43+05:30)

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முழு ஈடுபாட்டுடன் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி பேசினார்.

நீலகிரி

ஊட்டி,

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முழு ஈடுபாட்டுடன் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி பேசினார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளருமான டி.என்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர்அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ் கூறியதாவது:-

நீலகிரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், கிராமங்களின் வளர்ச்சிக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி, அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளை அங்கன்வாடி பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். மகளிர் திட்டம் சார்பில், காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக சமூக நலத்துறை அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஆகியோர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அனைத்துப்பகுதிகளிலும் உயர் அழுத்தம் உள்ளவர்களை கணக்கெடுத்து மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டும்.

முழு ஈடுபாடு

அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கும் சென்று சேர்க்கும் வகையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஊட்டி டேவிஸ் பூங்காவில், ரூ.91 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டார்.

கூட்டத்தில் ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), கால்நடை பராமரிப்புத்துறை இணை இக்குனர் டாக்டர் பகவத்சிங், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி டீன் மனோகரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் பலர் கலந்துகொன்டனர்.


Next Story