களை ஒட்டுண்ணி பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் அதிகாரி தகவல்


களை ஒட்டுண்ணி பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

களை ஒட்டுண்ணி பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரி ஆலோசனை வழங்கி உள்ளார்.

கடலூர்

குமராட்சி,

குமராட்சி வட்டாரத்தில் சம்பா பருவ நெல் அறுவடைக்கு பின் நெல் தரிசில் உளுந்து, பச்சை பயிறு போன்ற பயிறு வகை பயிர்கள் 10,500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிர்களை சாகுபடி செய்யும் போது கூடுதல் வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டுகளில் குமராட்சி வட்டாரத்தில் ஒரு சில பகுதிகளில் கஸ்குட்டா களை ஒட்டுண்ணியானது பயிர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த களையானது பயிறு வகை பயிர்களில் ஒட்டுண்ணி செடியாக வளர்ந்து பயிரிலிருந்து உணவையும், நீரையும் எடுத்து கொண்டு பயிர் வளர்ச்சியை குறைத்து பெருமளவில் மகசூல் இழப்பினை ஏற்படுத்துகிறது. இந்த களை ஒட்டுண்ணியினை கோடை உழவு செய்வதன் மூலமும், பயிர் இல்லாத தருணங்களில் பாதிக்கப்பட்ட வயல்களில் கிளைபோசெட் களைக்கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் நீரில் 20 முதல் 30 மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். மேலும் பாதிக்கப்பட்ட செடிகளை வயல்களில் இருந்து முழுவதுமாக அகற்றுவதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்.

களைக்கொல்லி

களை முளைப்பதற்கு முந்திய களைக்கொல்லியான பெண்டிமெத்தலின் 30 ஈஸி களைக்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 400 மில்லி லிட்டர் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து விதைப்பு செய்த மூன்றாம் நாளில் வயலில் ஈரம் இருக்கும் நிலையில் கைத்ெதளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலமாகவும், களை முளைத்த பின் தெளிக்கும் களைக்கொல்லியான இமாசிதபைர் 10 எஸ்.எல். மருந்தினை ஏக்கருக்கு 250 மில்லி லிட்டர் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள் தெளிப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். எனவே மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்து களை ஒட்டுண்ணி கஸ்குட்டாவின் பாதிப்பிலிருந்து பயிர்களை விவசாயிகள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவல் குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story