கட்டணம் இல்லாமல் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கட்டணம் இல்லாமல் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயம் செய்யும் ஒரு கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்களாகவே 5 முதல் 100 பேர் குழுவாக இணைந்து அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதிமொழி ஏற்று இத்திட்டத்தில் பங்கேற்கலாம். இக்குழுவிற்கு தனியாக பெயர் வைத்து அதில் தலைவர் மற்றும் செயலாளரை தேர்வு செய்து உறுப்பினர்களின் பெயர், கிராமம், பட்டா, ஆதார் எண், புகைப்படம் மற்றும் நில விவரங்களுடன் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விழுப்புரத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகள் விண்ணப்பிக்க இயலாது. குழுவாக மட்டுமே பதிவு செய்து அங்ககச்சான்று பெறலாம். குழுவில் உள்ள விவசாயிகளே மற்ற குழு உறுப்பினர்களின் வயல்களை அங்கக முறையில் பயிர் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டணமின்றி சான்று
கட்டணம் இன்றி பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தில் சேரும் விவசாய குழுவிற்கு முதல் 2 ஆண்டுகள் அங்கக விவசாயத்திற்கு மாறிக்கொண்டு இருக்கும் குழு என்றும் மூன்றாம் ஆண்டிலிருந்து 100 சதவீதம் அங்கக வேளாண்மை குழு என்றும் வாய்ப்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அங்ககச்சான்று முறையில் பயிரிட விரும்பும் விவசாயிகள் பதிவு செய்வதற்கு விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது அங்ககச்சான்று ஆய்வாளர் லாவண்யாவையோ (63825 01750) தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவைல விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.