சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகாரி ஆய்வு
சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை 2022-23-ம் ஆண்டுக்கான அரவை பருவம் அடுத்த மாதம்(டிசம்பர்) தொடங்க உள்ளது. இதையொட்டி தற்போது ஆலையில் எந்திரங்கள் பராமரிப்பு பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னை தலைமை சர்க்கரை துறை தலைமை பொறியாளர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ஆலையில் உள்ள எந்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்வதோடு, அதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்யவேண்டும் என ஆலை நிர்வாக இயக்குனர் சதீஷ், தலைமை பொறியாளர் ராம்குமார், தலைமை ரசாயனர் செல்வேந்திரன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து தலைமை பொறியாளர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், 2022-23-ம் ஆண்டு அரவைப் பருவத்திற்காக ஆலை எந்திரங்களில் பழுதான உதிரி பாகங்களை மாற்றுவதற்காக தமிழக அரசு ரூ.5 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உதிரி பாகங்கள் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நடப்பு அரவைப் பருவத்திற்கு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஆய்வின்போது தலைமை கரும்பு அலுவலர் ரவி, கிருஷ்ணன், பொறியாளர் முருகன், தொழிலாளர் நல அலுவலர் சக்கரவர்த்தி, அலுவலக மேலாளர் வெங்கடாசலம், தலைமை கணக்கு அலுவலர் ரமேஷ் பாபு, ரசாயனர் மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.