நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு


நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு
x

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழத்தெருவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழத்தெருவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனுக்குடன் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில்-மணல்மேடு சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள உரமூட்டைகளின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். பின்னர் 2 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

குறுவை சாகுபடி

பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக அரசு இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு 39 ஆயிரம் எக்டேர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு 37 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில விவசாயிகள் மாற்று பயிருக்கு மாறியதால் சாகுபடி அளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டு 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 800 மூட்டை அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

சேமிப்பு கிடங்கு

சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ரூ.117 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.120 கோடி வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு தற்போதுவரை ரூ.25 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சீர்காழி அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலை வளாகத்தில் புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள சைலோ தானியங்கி நவீன அரவை எந்திரம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் லலிதா

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, கூட்டுறவுத்துறை மேலாண்மை இயக்குனர் பெரியசாமி, மாவட்ட இணை பதிவாளர் அருள்அரசு, துணைப் பதிவாளர் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், கூட்டுறவு சங்கத் தலைவர் போகர் ரவி மற்றும் தாசில்தார்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி, அங்காரகன் உள்ளிட்ட சன்னதிகளில் அதிகாரி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.


Next Story