வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
திருவெண்காடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சி.எஸ்.ஐ.டி. திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கூடிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் தற்போது ஒரு கட்டிடம் பழுதடைந்து உள்ளது. மாணவர்கள் கூடுதலாக இருப்பதால், மேலும் ஒரு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதனையடுத்து வானகிரி மீனவ கிராமத்தில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை பணிகளை பார்வையிட்டார். பின்னர் செம்பதனிருப்பு ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர்கள் தெய்வானை, கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், லட்சுமி முத்துக்குமரன், ஓவர்சியர் பாபு உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.