நாகூர்- நாச்சியார்கோவில் சாலை பணி தரம் குறித்து அதிகாரி ஆய்வு
நாகூர்- நாச்சியார்கோவில் சாலை பணி தரம் குறித்து அதிகாரி ஆய்வு
நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.10.42 கோடி மதிப்பில் நாகூர்- நன்னிலம்- நாச்சியார்கோவில் வழித்தடத்தில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் நடைபெற்று வந்தன. நாகை மாவட்டத்துக்குட்பட்ட இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. இந்த சாலை பணிகளின் தரம் குறித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது திட்டச்சேரி அருகே மரைக்கான் சாவடி பகுதியில் போடப்பட்ட சாலையினை எந்திரம் வாயிலாக துளையிட்டு எடுக்கப்பட்ட மாதிரியினை வைத்து சாலையின் தரம் குறித்து பரிசோதனை செய்தார். மேலும் சாலையின் நீளம், அகலம் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து திட்ட மதிப்பீட்டின் படி அனைத்து பணிகளும் முடிவுற்றதா? என ஆவணங்களை சரிபார்த்தார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்ட கண்காணிப்பு என்ஜினீயர் கிருஷ்ணசாமி, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நாகை கோட்ட என்ஜினீயர் நாகராஜி, தரக்கட்டுப்பாட்டு கோட்ட என்ஜினீயர் சிவகுமார் உள்பட கோட்ட என்ஜினீயர்கள் மற்றும் உதவி என்ஜினீயர்கள் உடன் இருந்தனர்.