விதைப்பண்ணைகளில் அதிகாரி ஆய்வு
விதைப்பண்ணைகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.
சூலக்கரை,
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 1,250 எடேரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியகாந்தி வீரிய ஒட்டு ரக விதைப்பண்ணையை சென்னை விதைச்சாறு இணை இயக்குனர் ஜெய செல்வின் ஆய்வு செய்தார். விதைப்பண்ணையில் விதை ஆதாரம் சரிபார்த்தல், பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, கலவன் பயிர்களை நீக்கல், ரகங்களின் விதைப்பு வரிசைகள், மகரந்த சேர்க்கை செய்த விதம், விதைப்பண்ணையின் ஆய்வுகள், விதை சான்று வழிமுறைகளின் படி பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் பப்பாளி அங்ககப்பண்ணையையும் ஆய்வு செய்தார். பின்னர் விதை சான்று அலுவலர்களுக்கு விதை உயிருள்ள இடுபொருள் நல்ல விளைச்சலுக்கும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் அடிப்படை தரமான நல்ல விதையாகும். தரமான விதை இல்லை என்றால் ஏனைய இடுபொருட்களை சரியான அளவில் இட்டாலும் மகசூல் பாதிக்கப்படும் என்றார். மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க விதைச்சான்று நடைமுறைகளின் படி விதைப்பண்ணைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ், விதை சான்று அலுவலர்கள், அருப்புக்கோட்டை வட்டார உதவி விதை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.