பிரகதீஸ்வரர் கோவிலில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரி ஆய்வு
பிரகதீஸ்வரர் கோவிலில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, இந்த கோவிலுக்கு 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையின் சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்தும் இடம், நுழைவு வளாகம், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றுக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் சலுப்பை ஊராட்சியில் அழகர் கோவிலுக்கு வெளியே உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட, 8.50 மீட்டர் உயரத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் உருவாக்கப்பட்ட நாயக்கர் கால ராட்சத யானை சிற்பத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இந்த யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் வள்ளுவன், செயற்பொறியாளர் மணிவண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.