காலை உணவு திட்டத்தை அதிகாரி ஆய்வு
ஆற்காடு நகராட்சி வடக்கு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.
ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 661 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் சம்பத் நேற்று ஆற்காடு தோப்புக்கானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கற்பித்தல் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்.
இதனைத்தொடர்ந்து பொது சுகாதாரத்துறை மூலமாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீட்டிற்குச் சென்று முறையாக மருந்துகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறதா மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதித்த பின்னர் மருந்துகள் வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.