சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காவிட்டால் விதை விற்பனை உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை
சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காவிட்டால் விதை விற்பனை செய்வதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவுச்சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளர்களிடம் பெற்று ஆய்வின்போது காண்பிக்க வேண்டும். புதிய ரகங்கள், இந்த பருவத்திற்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். பருவத்திற்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நடவு செய்தவுடன் விரைவில் கதிர் வருதல், கதிர் வராமலே இருத்தல் போன்ற பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது.
விதிகளை மீறினால் உரிமம் ரத்து
மேலும் பெறப்பட்ட விதைகளை மரச்சட்டகங்களின் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் இல்லாமல் தனியாக இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் சேர்த்து இருப்பு வைத்தால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆகவே தேவையான விவரங்கள் அடங்கிய கொள்முதல் ரசீது, இருப்புப்பதிவேடு, பதிவுச்சான்று, உண்மை நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை நகல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனைப்பட்டியல் உரிய படிவத்தில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதிநாள், உற்பத்தியாளர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிட்டு கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். மேற்கூறப்பட்ட சட்ட விதிகளை மீறுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல் விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.