ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை
கொடைக்கானலில் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு ஓட்டல்கள் மற்றும் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி, கொடைக்கானல் உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கொடைக்கானல் அண்ணா சாலை, லாஸ்காட் ரோடு, அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 18 கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததும், தரமற்ற எண்ணெய்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், கடைகளில் சுகாதாரத்துடன் கூடிய அடிப்படை வசதிகளை மேற்கொண்டு புகைப்படத்துடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.