மாணவிகள் அரசு விடுதிகளில் அதிகாரி திடீர் ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகளில் அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் உள்ள கல்லூரி மாணவிகள் அரசு விடுதிகளில் அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.
திடீர் ஆய்வு
திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் காப்பகங்கள், மாணவர்கள் விடுதிகளில் உணவின் தரத்தை பரிசோதனை செய்ய திடீர் ஆய்வு செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் தாலுகா அலுவலக வளாகத்தில் தனித்தனியாக உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவிகளின் விடுதிகளை நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் வார்டன் இல்லாமல் இருந்தார். உடனடியாக அங்குள்ள சமையலர் மூலம் வார்டனை விடுதிக்கு வரவழைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் சமையலறையை ஆய்வு செய்தார். அந்த விடுதியில் உணவு விறகு அடுப்பின் மூலம் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது இங்கு கியாஸ் அடுப்பு கிடையாதா என்றும், மாணவிகள் எத்தனை பேர் தங்கி உள்ளனர், தினமும் எவ்வாறு உணவு வழங்கப்படுகிறது என்று வார்டன் மற்றும் மாணவிகளிடம் தாசில்தார் கேட்டறிந்தார்.
மாணவிகளுக்கு தரமான முறையில் சுத்தமான முறையில் உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மாணவிகளுக்கு பாதுகாவர்கள் தினமும் விடுதியில் இருக்க வேண்டும் என்றார்.
எச்சரிக்கை
அதேபோல் பிற்படுத்தபட்டோர் நலத்துறை விடுதியில் அவர் ஆய்வு செய்த போது அந்த விடுதியில் வார்டன் மற்றும் சமையலர் இல்லாதது தெரியவந்தது.
மேலும் வெளி நபர் ஒருவர் சமையலறையில் சமையல் செய்து கொண்டு இருந்தார். தாசில்தார் அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டதும் துப்புரவு பணியாளர் என்று கூறினார்.
இதையடுத்து விடுதி வார்டனிடம் அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது வார்டன் வெளியில் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து சிறிது நேரத்தில் விடுதியில் பணியாற்றும் 2 சமையலர்களும் அங்கு வந்தனர்.
அவர்களிடம் வெளி நபரை விடுதியில் விட்டு, விட்டு நீங்கள் எப்படி வெளியே செல்லலாம் என்ற கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மாணவிகளிடன் உணவு முறையாக வழங்கப்படுகிறதா என்று அவர் கேட்டறிந்தார்.
அடுத்தமுறை ஆய்விற்கு வரும் போது வார்டன், சமையலர் இல்லாமல் இருந்தால் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் என்று அவர்களை தாசில்தார் எச்சரித்தார்.
வெளி நபர்கள் சமையல் செய்ய அனுமதிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வாழை பழத்தை தேடிய தாசில்தார்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில் தாசில்தார் சுரேஷ் ஆய்வு செய்தார். அப்போது அந்த விடுதியில் விடுமுறையில் சென்றவர்கள் போக மீதமுள்ள 17 மாணவிகள் மட்டுமே தங்கி இருந்தனர். சமையறையில் மாணவிகளுக்கு முட்டை குருமா செய்யப்பட்டு இருந்தது.
அதில் 14 முட்டை மட்டுமே இருந்தது. 3 முட்டை குறைவாக இருந்தது. அப்போது சமையலர் முட்டை சாப்பிடாத மாணவிகளுக்கு வாழை பழம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
உடனடியாக தாசில்தார் வாழை பழம் எங்கே உள்ளது என்று தேடி சென்றார். வாழை பழம் இல்லை. இதையடுத்து பட்டியல்படி மாணவிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.