எள் பயிர் பாதிக்கப்பட்ட வயல்களில் அதிகாரி திடீர் ஆய்வு
எள் பயிர் பாதிக்கப்பட்ட வயல்களில் அதிகாரி திடீர் ஆய்வு செய்தனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சை வயல்களில் பயிரிடப்பட்டிருந்த எள் செடிகள் முற்றிலும் அழிந்து நாசமானது. இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று எள் பயிர் செய்யப்பட்டு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர். அதைக்கேட்ட அதிகாரிகள், தா.பழூர் வட்டாரம் முழுவதும் சுமார் 700 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். உரிய நிவாரணம் கிடைக்க ஆவன செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். இந்த ஆய்வின்போது வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார், தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.