விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
கடையநல்லூரில் விவசாயிகளுடன் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவசாயகளுடனான ஆலோசனை கூட்டம், கடையநல்லூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வனச்சரகர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில், ''வனப்பகுதியில் இருந்து விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகாதவாறு அகழிகள், நவீன மின்வேலி அமைக்க வேண்டும். வனப்பகுதியில் யானைகளுக்கு போதிய உணவு கிடைக்க செய்ய வேண்டும். மேக்கரை வனப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் தனியார் விடுதி கட்டிடங்கள், தனியார் அருவிகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். காட்டு பன்றியை வன பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.