6 மாதமாக தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அலுவலர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை
6 மாதமாக தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அரசு அலுவலர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
6 மாதமாக தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அரசு அலுவலர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக இந்த கூட்டம் காலை 10.30 மணியளவில் தொடங்கும். ஆனால் சுமார் 11 மணி வரை கூட்டத்திற்கு பெரும்பாலான அரசு உயர் அலுவலர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமாரிடம் தாலுகா அளவில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்திற்கு தான் அதிகாரிகள் வருவதில்லை.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கும் வரவில்லை என்றால் எப்படி என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங் முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. அப்போது அவரிடமும் விவசாயிகள் அதிகாரிகள் வராதது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது கலெக்டர் டெல்லிக்கு சென்று இருப்பதாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றொரு நிகழ்ச்சி சென்று இருக்கிறார். அவர் வந்து விடுவார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் 6 மாதமாக நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு அரசு அலுவலர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவை தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயிர் இழப்பீடு குறித்து முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தொிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் நிதிப்பயன் பெறுதலில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் பெற்றுத்தர வேண்டும்.
மணிலா விதைகள் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களில் துவரை மற்றும் உளுந்து விதைகள் மானியத்தில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு விதிமுறைகளின்படி எடை போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.
உரிய நடவடிக்கை
விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும் தனிநபர் தொடர்பான மனுக்களும் கூட்டத்தில் பெற்று கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.