பருத்தி வயல்களில் அதிகாரிகள் ஆய்வு
பருத்தி வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா அல்லாளப்பேரி மற்றும் வல்லப்பன்பட்டி கிராமங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள பருத்தி பயிரில் பாதிப்பு காணப்பட்டது. அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பரிந்துரைக்க விருதுநகர், வேளாண்மை இணை இயக்குனரின் அறிவுரையின் பேரில் கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜாபாண்டி, இணைப்பேராசிரியர் (பயிர் வினையியல்), உஷாராணி, இணைப்பேராசிரியர் (பூச்சியியல்) அகிலா, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுபாடு) பாக்கியலட்சுமி, காரியாபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர் அருள்மொழி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அல்லாலப்பேரி மற்றும் வல்லப்பன்பட்டி கிராமங்களுக்கு சென்று பருத்தி வயல்களில் மேற்குறிப்பிட்டுள்ள குழுவினரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பருத்தி செடிகளில் நுண்ணூட்ட சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கு நிலத்தில் போதுமான ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு வேளாண்மை பல்கலை கழக பருத்தி பிளஸ் 2.5 கிலோவை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 45 மற்றும் 75-வது நாட்களில் இலைகளிள் மேற்பரப்பில் நன்கு படுமாறு தெளித்திடுமாறு விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைத்தனர். எனவே விவசாயிகள் இந்த பரிந்துரையினை கடைபிடித்து பயன் பெறுமாறு விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.