குடிநீர் வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு


குடிநீர் வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
x

சிவகாசி பகுதியில் குடிநீர் வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதியில் குடிநீர் வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

குடிநீர்

சிவகாசி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் வாகனங்கள் மூலம் பல இடங்களில் குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் இது போன்ற வாகனங்களில் மூலம் பெறப்படும் குடிநீர் 15 நாட்களுக்கு மேல் பாதுகாத்து வைத்து பயன்படுத்தும் நிலை உள்ளது.

இந்த நிலையில் சிவகாசி பகுதியில் சிலர் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரமற்றதாகவும், குடிநீரில் தேவையான அளவு குளோரின் கலக்காமல் இருப்பதாகவும் புகார்கள் வந்தன.

ஆய்வு

இதை தொடர்ந்து வட்டார சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் காளிராஜ், வெற்றிவேல், கிருஷ்ணமூர்த்தி, அரவிந்த்குமார், மூர்த்தி, செல்வக்குமார் ஆகியோர் நேற்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அவ்வழியாக வந்த குடிநீர் வாகனங்களில் இருந்து குடிநீர் மாதிரி எடுத்து சோதனை செய்தனர்.

இதில் ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குடிநீரில் தேவையான அளவு குளோரின் கலப்படம் செய்யப்படவில்லை என தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.பின்னர் சுகாதார அதிகாரிகள் அந்த வாகனத்தில் இருந்த குடிநீரில் குளோரினை கலந்தனர்

அபராதம்

இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அதே பகுதியில் உள்ள பெட்டிகடைகளில் திடீர் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் ஒரு ஓட்டலில் 7 கிலோ கெட்டுபோன புரோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதார அதிகாரி ஜெயச்சந்திரன் கூறியதாவது:- குடிநீரை 5 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்து பயன்படுத்தக்கூடாது. எனவே தரமான குடிநீரை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story