செண்பக கால்வாயில் அதிகாரிகள் ஆய்வு
சுரண்டை செண்பக கால்வாயில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தில் இருந்து இலந்தை குளத்திற்கு செண்பக கால்வாய் செல்கிறது. ஊரின் மையப் பகுதியில் செல்வதால் பல்வேறு கழிவுகள் கால்வாயில் கலந்து சாக்கடையாக காட்சியளிக்கிறது. எனவே கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான 10 பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டிருந்தார். அதில் செண்பக கால்வாயை சீரமைத்து, சாக்கடை கழிவு நீரை சுத்திகரித்து இலந்தை குளத்திற்கு சுத்தமான நீராக அனுப்ப வேண்டுமென தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கோரிக்கை வழங்கி இருந்தார்.
இதை தொடர்ந்து தமிழக அரசு உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பரமசிவன், ராஜ்குமார், ரமேஷ், அன்னபிரகாசம், அரசு ஒப்பந்ததாரர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கழிவு நீரை சுத்திகரித்து இலந்தை குளத்திற்கு அனுப்பும் செயல் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.