விருத்தாசலம் பகுதி பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
விருத்தாசலம் பகுதி பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விருத்தாசலம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, காவல் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகள் சார்பில் பள்ளி வாகனங்கள் கூட்டு தணிக்கை ஆய்வு முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. இதில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் சுகப்பிரியா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகா ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 45 பள்ளிகளின் 261 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வாகனங்களின் அமைப்பு, படிக்கட்டுகள், ஜன்னல்கள், அவசர வழி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா, என ஆய்வு செய்தனர். மேலும் வாகனங்களில் தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமரா, புத்தகங்கள் வைக்கும் அலமாரிகள், முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், பிரதிபலிப்பான் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளனவா எனவும் ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 21 வாகனங்களில் பல்வேறு குறைகள் இருந்ததால் நிராகரிக்கப்பட்டன. இந்த வாகனங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின் மீண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து ஆய்வு முடிக்கப்பட்ட பின் உரிய சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக விருத்தாசலம் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.