விமான ஓடுதளத்தை அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி அருகே விமான ஓடுதளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை, விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக விமான ஓடுதள பாதையை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சரின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குனா் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுனர்கள் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலை அடிவாரத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சுசிலா, தலைமை நில அளவையர் காளிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் பரமசிவம், சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.