வடமலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
தொழுநோய் கண்டறிய சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வடமலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
தொழுநோய் கண்டறிய சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில் வடமலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிறப்பு முகாம்
தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிவகாசி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி யூனியனில் உள்ள 54 கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் திருத்தங்கல் பகுதியில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொழுநோய் கண்டுபிடிப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் இன்று வரை நடக்கிறது.
இந்த சிறப்பு முகாம்களை சென்னை டாக்டர் அமுதா தலைமையில் விருதுநகர் மாவட்ட துணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் யமுனா, டெல்லி மத்திய தொழுநோய் ஆராய்ச்சி பிரிவில் இருந்து டாக்டர்கள் லில்லிகாங்மேய், ஸ்ரீலேகாபென்னா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
வடமலாபுரம்
வடமலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் வைரக்குமார், டாக்டர் ரீனா, நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சசிகலா, மாவட்ட நலக்கல்வியாளர் கண்ணன், துணை இயக்குனர் சுகாதார பணிகளின் நேர்முக உதவி யாளர் சீனிவாசன், திண்டுக்கல் நலக்கல்வியாளர் சேகர், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் வீரபுத்திரன், மேற்பார்வையாளர்கள் பாண்டியன், முருகேசன், செல்வராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
8 பேருக்கு பாதிப்பு
சிவகாசி யூனியன், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் மண்டலங்கள் பகுதியில் நடைபெற்ற தொழுநோய் பாதிப்பு குறித்த ஆய்வில் 374 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 78,563 வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நோயில் இருந்து விடுபட தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் வைரகுமார் தெரிவித்தார்.