ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு
கிழவனேரி-வெற்றிலை முருகன்பட்டி சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரியாபட்டி,
கிழவனேரி-வெற்றிலை முருகன்பட்டி சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அரசு பஸ்
காரியாபட்டியில் இருந்து கிழவனேரி, வெற்றிலை முருகன்பட்டி வழியாக அல்லாளப்பேரி கிராமத்திற்கு அரசு பஸ் சென்று வருகிறது. இந்த பகுதியில் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளதால் இந்த பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் சென்று வேலை பார்ப்பவர்கள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நபர்கள் இந்த அரசு பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். வடகிழக்கு பருவமழையின்போது கிழவனேரியிலிருந்து வெற்றிலை முருகன்பட்டி செல்லும் சாலையின் நடுவே சாலை சேதம் அடைந்தது. இதனால் 10 நாட்களாக அரசு பஸ் செல்லாமல் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
தடுப்புச்சுவர்
ஆதலால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டு தற்சமயம் பஸ் போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
அதேபோல கிழவனேரி கண்மாய் பகுதியில் தடுப்புச்சுவர் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் இச்சாலையில் தடுப்புச்சுவர் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ள இடத்தை விருதுநகர் மாவட்ட ஊராட்சி செயலரும், மண்டல அலுவலருமான முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரியம்மாள், சிவக்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் பார்வையிட்டனர்.