பழங்குடியின மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


பழங்குடியின மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 27 Aug 2023 3:00 AM IST (Updated: 27 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே பழங்குடியின மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேனி

பழங்குடியின மக்கள்

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் பழங்குடியின மக்களுக்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. இங்கு வசித்து வந்த பழங்குடியின மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 தரப்பினராக பிரிந்து தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின்போது 5 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்களை அங்கு வசித்து வந்த சிலர் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த குடும்பங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கடமலைக்குண்டு கன்னிமார்கோவில் மலைப் பகுதியில் உள்ள குகையில் தஞ்சமடைந்தனர். மேலும் உண்ண உணவு கிடைக்காமல் தவித்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று தேனி மாவட்ட சப்-கலெக்டர் முத்துமாதவன், ஆண்டிப்பட்டி தாசில்தார் காதர்ஷெரீப் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கடமலைக்குண்டு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் அவர்கள் இரு தரப்பு பழங்குடியின மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர், தங்களை மற்றொரு தரப்பினர் அடித்து காயப்படுத்தியதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து கடமலைக்குண்டு போலீசாரை அழைத்து சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது பழங்குடியின மக்கள் தரப்பில் எந்த புகாரும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே பேச்சுவார்த்தையின் போது பழங்குடியின மக்கள் சிலர் வெளி நடப்பில் ஈடுபட்டனர். முடிவில் மலைக்குகையில் குடியேறிய பழங்குடியின மக்களை சமாதானப்படுத்தி கரட்டுப்பட்டியில் அவர்களுக்கு கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளுக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

மீண்டும் மலைப்பகுதிக்கு

இதையடுத்து அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அந்த காலனி அமைந்திருக்கும் பகுதியில் பழங்குடியினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் அதிகாரிகள் சென்ற சில நிமிடங்களில் பழங்குடியின மக்கள் சிலர் வீடுகளுக்கு செல்லாமல் மீண்டும் மலைப்பகுதிகளுக்கு சென்று விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பிரச்சினை செய்த யாரையும் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் குழந்தைகளுடன் தொகுப்பு வீடுகளில் வசிக்க அச்சமாக உள்ளது. மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இருதரப்பு பழங்குடியின மக்களுக்கும் முறையான கவுன்சிலிங் அளித்து அவரவர் வீடுகளில் அச்சமின்றி தங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் கடமலைக்குண்டு போலீசார் அவ்வப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.


Next Story