மதுரை எய்ம்ஸ் அமையும் இடத்தில் ஜப்பான் நிறுவன அதிகாரிகள் ஆய்வு- அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்


மதுரை எய்ம்ஸ் அமையும் இடத்தில் ஜப்பான் நிறுவன அதிகாரிகள் ஆய்வு- அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஜப்பான் நிறுவன அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்.அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்.

மதுரை


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஜப்பான் நிறுவன அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்.அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த இடத்தில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள்கூட ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மதுரையை சேர்ந்த நாகராஜன் வெங்கட்ராமன் என்பவரை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் நேரில் ஆய்வு நடத்தப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்படும் எனவும் கூறி இருந்தார்.

நேரில் ஆய்வு

இந்த நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய இருக்கும் இடத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் வெங்கட்ராமன் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பார்வையிட்டு, மருத்துவமனையின் இயக்குனர் ஹனுமந்த்ராவிடம் மதுரை எய்ம்ஸ் கட்டுமான தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது ஜப்பான் நாட்டு நிதி நிறுவனமான ஜைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ரியோ ஒபிசி, ஆதித்திபூரி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

அதிகாரிகளின் இந்த ஆய்வின் மூலம் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்படும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஆஸ்பத்திரி

இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ரூ.271 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய அறுவைச்சிகிச்சை வளாகம் (காம்பளக்ஸ்) அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்தது. அந்த பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

இந்தநிலையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் குழுவினர் நேற்று கட்டுமானப்பணி நடக்கும் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து வந்த ரியோ ஒபிசி, ஆதித்தி பூரி ஆகியோர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க மருத்துவமனை பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.இந்த ஆய்வில் டீன் ரத்தினவேல், மருத்துவ இருப்பிட அதிகாரி ஸ்ரீலதா மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story