தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து 14 வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின்பேரிலும், தொழிலாளர் கூடுதல் கமிஷனர் உமாதேவி, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும், வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி வழிகாட்டுதலின்படியும் வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் ஞானவேல் (அமலாக்கம்) தலைமையில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் ஆகியோர் வேலூர் நேதாஜி மார்க்கெட், மீன் மார்க்கெட், மெயின்பஜார், மாங்காய்மண்டி, கொணவட்டம், மேல்மொணவூர், ராணிப்பேட்டையில் காய்கறி, பூ, பழம், மீன், இறைச்சி கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது 52 மின்னணு தராசுகள், 11 மேசை தராசுகள், 52 எடைகற்கள், 2 மேடை தராசுகள், 3 விட்டத்தராசுகள் என்று மொத்தம் 120 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 14 வியாபாரிகள் மீது இணக்க கட்டண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள காய்கறிகடைகள், சந்தைகள், சாலையோர கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எனவே வியாபாரிகள், வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரையிடவும், மறுமுத்திரை சான்றினை நன்கு தெரியும்படியும் வைக்க வேண்டும். வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரையிடாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமும், முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை நன்கு தெரியும்படி காட்டி வைக்காவிட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்று வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் ஞானவேல் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.