கரூர் மாநகராட்சியில் பணிகள் தாமதத்திற்கு அதிகாரிகளே காரணம்; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு


கரூர் மாநகராட்சியில் பணிகள் தாமதத்திற்கு அதிகாரிகளே காரணம்; கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
x

கரூர் மாநகராட்சியில் பணிகள் தாமதத்திற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கரூர்

மாதாந்திர கூட்டம்

கரூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களின் வார்டு பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள், திருமாநிலையூரில் இருந்து ராயனூர் வழியாக ஈசநத்தம் செல்லும் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் அந்த சாலையில் பல்லாயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயணித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மிக அதிகம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் சாலையில் சாலையின் இரு புறங்களிலும் அகலப்படுத்த வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.430 ஊதியம் வழங்க வேண்டும்.

மெத்தன போக்கே காரணம்

கரூர்-வெங்கமேடு குகைவழி பாதையில் மழைநீர் அதிகம் தேங்குவதால் அதில் வழுக்கி பலர் கீழே விழுந்து உள்ளதால் குகை வழி பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் உரிய அங்கீகாரம் இல்லாமல் கோழி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுடன் உரிமம் இல்லாமல் இயங்கி வரும் கோழி இறைச்சி கடைகளை மூட வேண்டும். சுங்க கேட்டில் இருந்து தாந்தோணிமலை செல்லும் சாலையின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் செயல்பாடுகளின் மெத்தன போக்கே பணிகள் கிடப்புக்கு காரணம். எனவே மாநகராட்சி ஊழியர்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story