தலைமை ஆசிரியையின் ஓய்வூதிய மனுவை கிடப்பில் போட்ட அதிகாரிகள்


தலைமை ஆசிரியையின் ஓய்வூதிய மனுவை கிடப்பில் போட்ட அதிகாரிகள்
x

விபத்தில் பாதிக்கப்பட்டு கை, கால் செயலிழந்த தலைமைஆசிரியையின் ஓய்வூதிய மனு கிடப்பில் போட்டுள்ளதால் நடக்க முடியாத அவர் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருகிறார்.

திருவண்ணாமலை

செய்யாறு

விபத்தில் பாதிக்கப்பட்டு கை, கால் செயலிழந்த தலைமைஆசிரியையின் ஓய்வூதிய மனு கிடப்பில் போட்டுள்ளதால் நடக்க முடியாத அவர் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருகிறார்.

தலைமை ஆசிரியை

செய்யாறு டவுன் கண்ணுகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பி.கே. சரஸ்வதி (வயது 58). தொடக்கப்பள்ளிளில் ஆசிரியையாக பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பாண்டியம்பாக்கம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரிையயாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2021-ம் வருடம் ஜூலை மாதம் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்திற்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதி சுயநினைவு இழந்தும், கை கால் அசைக்க முடியாத நிலையிலும், வாய் பேச முடியாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியை சரஸ்வதிக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வரும் டாக்டரின் அறிக்கையின்படி தொடர்ந்து பணியாற்ற முடியாத இயலாமை நிலையில் கடந்த 28.09.2022 ஓய்வு பெற்றுள்ளார்.

கிடப்பில் ஓய்வூதிய மனு

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஓய்வூதியமோ எவ்வித பணபலனும் கிடைக்காமல் தொடர் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். ஓய்வூதிய மனு கிடப்பில் போடப்பட்டதே இதற்கு காரணம் என தெரிகிறது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை சரஸ்வதி நடக்கக்கூட முடியாததால் உறவினர்கள் சக்கர நாற்காலியில் அனக்காவூர் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க சென்றனர். அப்போது வட்டார கல்வி அலுவலகத்தில் பதில் கூற கூட அதிகாரி இல்லாததால் சிறிது நேரம் காத்திருந்த உறவினர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

எனவே கல்வித்துறை அதிகாரிகள், கருவூல துறை அதிகாரிக் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓய்வுபெற்ற தலைமைஆசிரியை சரஸ்வதிக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story