மழைநீர் சேகரிப்பு தொட்டி உள்ளதா என அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும்
ஆற்காடு நகரில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி உள்ளதா என அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆற்காடு நகரில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி உள்ளதா என அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி கூட்டம் கூட்ட நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது.
பொன். ராஜசேகர்: தூய்மை பணியாளர்களுக்கு வருங்கால வைப்புத்தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர் இறந்து விட்ட பிறகும் அவருக்கு சேர வேண்டிய பணம் தரப்படுவதில்லை.
ஆய்வு செய்ய வேண்டும்
செல்வம் (பா.ம.க.): காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுகிறதா. இல்லை என்றால் அதில் வேலை செய்த நபர்கள் எங்கே வேலை செய்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அருகிலேயே பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
விஜயகுமார்: ஒவ்வொருவரும் வீடு கட்டும்போது மழை நீர் சேகரிப்பு தொட்டி உள்ளதா என நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
செல்வம் (தி.மு.க.): என்னுடைய வார்டில் கால்வாய் சரியாக சுத்தம் செய்வதில்லை. சரியான முறையில் கால்வாய் சுத்தம் செய்யபடாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த சொல்லி கடந்த கூட்டத்திலேயே தெரியப்படுத்தினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாவை: கடந்த இரண்டு நகர மன்ற கூட்டத்திலும் மாடு தொல்லை, நாய் தொல்லை அதிகமாக உள்ளது குறித்து தெரிவித்து, நடவடிக்கை எடுக்க தெரிவித்திருந்தேன். இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்:- மாட்டின் உரிமையாளருக்கு முறைப்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
பாஞ்சாலி: எனது வார்டில் உள்ள ரேஷன் கடையில் மூன்று மாத காலமாக கோதுமை வழங்கப்படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.
தலைவர் :-இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தூர்வார முடியாது
காமாட்சி:- கொசு மருந்து அடிக்கச் சொல்லி இருந்தேன். ஆனால் நகராட்சி பணியாளர்கள் ஒரு சில இடங்களில் மட்டும் கொசு மருந்து அடித்து விட்டு செல்கிறார்கள். சிறிய தெருக்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. பன்றித் தொல்லை அதிகமாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜலட்சுமி: என்னுடைய வார்டில் உள்ள பெரிய கால்வாய் தூர்வாரச் சொல்லி கடந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். இதுவரை தூர் வாரவில்லை. வரும் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் பாஸ்கர்:-
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயை நாம் தூர் வார முடியாது. வேண்டுமானால் கழிவு நீர் செல்ல தடையாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.