சாயக்கழிவு பற்றி புகார் தெரிவித்தால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


சாயக்கழிவு பற்றி புகார் தெரிவித்தால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x

விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு

சாயக்கழிவு பற்றி புகார் தெரிவித்தால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சாயக்கழிவு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஈரோடு ஆர்.டி.ஓ., கோபி ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபோது கூறியதாவது:-

காலிங்கராயன் வாய்க்காலில் காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஆவுடையார்பாறை வரை சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கின்றன. கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளை அகற்றி, 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும்.

பேபி வாய்க்கால்

காலிங்கராயன் வாய்க்காலில் செல்லும் தண்ணீரில் டி.டி.எஸ். அளவு எவ்வளவு இருக்கிறது என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த தகவல் விவசாயிகளுக்கு தற்போது அனுப்பி வைக்கப்படுவதில்லை. மீண்டும் அதன் விவரம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

சாயக்கழிவு கலப்பது தொடர்பாக புகார் தெரிவித்தால், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்துவது கிடையாது. இதனால் சாயக்கழிவு அதிகமாக கலக்கப்பட்டு வருகிறது.

எனவே புகார் தெரிவித்துடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பேபி வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த பேபி வாய்க்காலை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விவசாயிகளின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story