ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் நவீன ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் நவீன ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் நவீன ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

திருச்சி

மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது. பின்னர், நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் அரிசி ஆலைகளில் முறைகேடு ஏதும் நடக்கிறதா? என்று குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி மண்டல குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து வரும் நெல் தரமாக வருகிறதா? அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசி தரமாக இருக்கிறதா? ஆலையில் இருந்து ரேஷன் அரிசி வேறு எங்கும் அனுப்பப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்வில் எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை. மேலும், பல்வேறு சோதனை சாவடிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் உரிய ஆவணங்களுடன் வருகிறதா? என்றும் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story