புதிய மழை நீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
திருப்பத்தூர் - தர்மபுரி சாலையில் புதிய மழை நீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பத்தூர் நகரின் முக்கிய பகுதியில் ஒன்று தர்மபுரி சாலை. இச்சாலையின் இருபுறமும் பல்வேறு நிறுவனங்கள், அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. புதுப்பேட்டை பகுதி வழியாக வரும் மழை வெள்ளத்தால் தர்மபுரி சாலை பாதிக்கப்படுகிறது. இச்சாலையின் இருபுறமும் நகராட்சியின் மூலம் அமைக்கப்பட்ட பழைய கால்வாய்கள் சிறியதாகவும் பல இடங்களில் சேதமுற்றும் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் புதியதாக மழை நீர் கால்வாய் அமைத்து வெள்ளம் ஏற்படும் காலங்களில் பாதிப்பு இல்லாமல் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினர் தர்மபுரி சாலையில் ஆய்வு செய்து மழை வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு பக்க கால்வாய் மற்றும் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்தனர்.