அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு
வாணியம்பாடி அருகே ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி அருகே ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி கட்டிடம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் காயிதே மில்லத் தெரு வழியாக பாலாற்றில் இருந்து ஏரிக்கு 30 அடி அகலம் கால்வாய் செல்லுகிறது. இந்த கால்வாயை ஒட்டி உள்ள நத்தம் புறம்போக்கு இடத்துடன் 2 அடி கால்வாய் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடந்த 2014 -15-ம் ஆண்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி உள்ளனர்.
இதில் 38 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் அங்கன்வாடி கட்டிடத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதும், மாலை நேரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பாடம் நடத்தி வருகின்றனர்.
சிறை பிடிப்பு
இந்தநிலையில் 2 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டியுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதை அறிந்த பொதுமக்கள் அதிகாரிகளையும், பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இரண்டு அடி கட்டிடத்தை மட்டும் அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாற்று கட்டிடத்தை வழங்கி முழுமையாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கட்டிடம் இடிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டு பொக்லைன் எந்திரத்தை அனுப்பினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.