செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கலெக்டரிடம் புகார்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேக்கரை பகுதியில் மலைப்பகுதிகளில் இருந்து இயற்கையாக வரும் நீரோடைகளை மறித்து சிலர் செயற்கை நீர் வீழ்ச்சிகளை கட்டியுள்ளதாகவும், அதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி குளிப்பதால் விவசாயத்திற்கு பயன்படும் அந்த நீரானது மாசடைந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தென்காசி உதவி கலெக்டருக்கு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடத்திய உதவி கலெக்டர், விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரானது பாதிக்கப்படுவதாக அறிக்கை அளித்தார். இதையடுத்து செயற்கை நீர்வீழ்ச்சிகள் அனைத்தையும் இடிக்க கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் செயற்கை நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு
இந்தநிலையில், அம்பை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் குற்றாலம், மேக்கரை, குண்டாறு உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டி சட்டத்திற்கு புறம்பாக கட்டிடங்கள், நீர்வீழ்ச்சிகள் கட்டி அதை வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாக மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீது விசாரண நடத்திய நீதிபதிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு ஒரு அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தது.
அதில், "மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் முறைகேடாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் குறித்து விசாரணை நடத்த 10 உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் உரிய முறையில் விசாரணை நடத்தி 90 நாட்களில் விசாரணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்" என கூறப்பட்டிருந்து.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 10 பேர் கொண்ட குழுவினர் 60 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அதிகாரிகள் ஆய்வு
அதன் அடிப்படையில் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, ஜெயந்தி உள்ளிட்ட 3 அதிகாரிகள் நேற்று மேக்கரை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சட்டத்திற்கு புறம்பாக வனப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா?, செயற்கை நீர்வீழ்ச்சிகளால் விவசாயிகளுக்கு எந்த அளவு பாதிப்பு உள்ளது?, கட்டிடங்களுக்கு அனுமதி அளித்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.