அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்
கடையம் அருகே அரசு நில ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர்.
கடையம்:
பொட்டல்புதூரில் பாப்பான் கால்வாய் அருகே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் தொட்டி உள்ளது. இங்கிருந்து வெள்ளிகுளம், பொன்நகர், நமச்சிவாயபுரம், புதுத்தெரு, ஆனந்தாபுரம், நெல்கட்டும்பாறை உட்பட பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த பகுதியில் அரசு நிலம் 18 சென்ட் உள்ளது. இதில் கூட்டுக்குடிநீர் தொட்டி பகுதியில் உள்ள நிலம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு வாட்ஸ்-அப் மூலமாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் நேற்று காலை ஆழ்வார்குறிச்சி வருவாய் ஆய்வாளர் திலகராஜ், பொட்டல்புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர்செல்வன், பஞ்சாயத்து தலைவர்கள் முருகன் (பாப்பான்குளம்), அழகுதுரை (ஏ.பி.நாடானூர்), மாரியப்பன் (திருமலையப்பபுரம்), பொட்டல்புதூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஏ.ஒன்.துரை, ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்பிரிவு ரவி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் முன்னிலையில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றிய பின்னர் வந்த பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசனிடம், மீதம் உள்ள பகுதியையும் கையகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.