ஒகேனக்கல் வெள்ளக்காடானது


ஒகேனக்கல் வெள்ளக்காடானது
x

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 3 மணி நிலவரப்படி 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தபடி பாறைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது. இதன் காரணமாக காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் மற்றும் துணை தாசில்தார் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

மேலும் வருவாய்த்துறையினர் சத்திரம் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கரையோர மக்கள் சமுதாய கூடம், சத்துணவு மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

அறிவுறுத்தல்

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

அப்போது ஒகேனக்கல் மீன் பண்ணை பகுதியில் தடையை மீறி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளித்தனர். அவர்களை வருவாய்த்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.


Next Story